உங்கள் பலம் பயன்படட்டும்
பலம் பொருந்திய இயந்திரங்கள் உருவாக்கப்படுவது பல விதமான கடினமான பணிகளை எல்லோருக்கும் எளிதாக்குவதற்காகவே. மனித வாழ்விலும் அப்படியே. பிறரை விட நாம் யாதொன்றிலும் பலமானவர்கள் என்றால், அந்த பலம் அல்லது வளம் நமக்கு தரப்பட்டதே அதை நாம் பிறருக்கும் பயன்படுத்தவே. உடலின் வலிமையா, அறிவில் வளமையா, திட்டமிடுதல், செயல்படுத்துதல் என என்ன திறமையென்றாலும் அவை எல்லாமே பிறருக்கும் பயன்படவே, தேவன் உன்னிடம் தந்திருக்கிறார். கனவை பொருளுணர்த்தும் தன பலத்தை யோசேப்பு பகிந்ததால், ஒரு தேசமும் அவன் குடும்பமும் உணவும், வாழ்வும் பெற்றன. நம் பலத்தில் பெருமை கொள்வதென்றால், அதைக் கொண்டு மனித இனத்தின் பாரத்தை இலகுவாக்குவது தான் நம் கடமையாக இருக்க முடியும். ஆகவே தான் பவுல் சொல்கிறான்: “சுமையாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளுங்கள். நீங்கள் இதனைச் செய்யும்போது கிறிஸ்துவின் ஆணைகளுக்கு உண்மையாகவே கீழ்ப்படிகிறீர்கள்.” (கலாத்தியர் 6:2) தலைமை அப்போஸ்தலன் அறிவுறுத்துகையில்: “உங்களில் ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து வரங்களைப் பெற்றுக்கொண்டீர்கள். பல வகையான வழிகளில் தேவன் தம் இரக்கத்தை உங்களுக்குக் காட்டியுள்ளார். தேவனுடைய வரங்களைப் பயன்படுத்தும் பொறுப்புக்கு உரியவர்களான பணியாட்களைப் போல நீங்கள் இருக்கிறீர்கள். எனவே நல்ல பணியாட்களாக இருந்து தேவனுடைய வரங்களை ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்குப் பயன்படுத்துங்கள்.” (1 பேதுரு 4:10) நம் பலம் அநேகம் பேருக்கு பலகீனத்தில் உதவி செய்து உயர்த்தட்டும்.