உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். எபே 5:19

இசை நம்மிலே நிறைந்திருக்கட்டும்

மனிதர்கள் பெற்றிருக்கிற மற்றுமொரு அபூர்வமான கொடை என்னவென்றால், குரலை எழுப்பிப் பாடுவது தான். பாடலை இயற்றுவது, இசை அமைப்பது, வளமாகப் பாடுவது எல்லாமே நம் தனி வரம் எனலாம். கருவிலிருக்கும் போதே குழந்தை இசையை உணரும், களிப்பை வெளிப்படுத்தும் என அறிவியலும் எண்பிக்கின்றது. எல்லா சூழலுக்கும் ஒரு இசை, ஒரு பாடல் இருக்கிறது. தேவனை துதிக்க, ஆர்ப்பரிக்க, அவர் உடனிருப்பை உணர, நன்றியை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, தேற்ற, திடப்படுத்த, வேதனையைக் களைய என எல்லா உணர்வு நிலைகளையும் வெளிப்படுத்தி தாவீது பாடியுள்ளான். அதனை நம் ஜெபத்திலும், வாழ்விலும் பயன்படுத்த பவுல் அறிவுறுத்துகிறார்; உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். எபே 5:19 ஆடைகள் கிழிக்கப்பட்டது, தடியால் அடித்தது, உச்சிறையில் இட்டது, கால்களை தொழு மரத்தில் தழைத்தது--எதுவுமே பவுலை பாடுவதனின்று தடுக்க இயலவில்லை; நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினார். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  அப்போஸ்தலர்  16:25 நாமும் வாழ்வின் இன்ப, துன்ப வேளைகளில் ஆவியாரால் தூண்டப்பெற்ற பாடல்களைப் பாடி மகிழ்ந்திருப்போம்.

 

அப்பா, பாடும் திறனை உங்களுக்குத் தந்தமைக்கு நன்றி கூறுகிறோம். உம பரிசுத்த ஆவியார் தாமே எல்லா சூழலிலும் எங்களை துதித்துப் பாடச்  செய்வாராக,  இயேசுவின் அற்புதமான நாமத்தில் செபிக்கிறோம். ஆமென்.