உங்கள் சரீரங்களை தேவனுக்கு உயிர்ப் பலியாகத் தாருங்கள். இதுவே அவரை வழிபடுவதற்கான பக்தி வழியாகும். தேவன் இதில் திருப்தியடைகிறார். ரோமர் 12:1

உடலை பலியாக ஒப்புக்கொடு

தேசத்தின் தலைவர்களை நெருங்கிச் செல்வதென்றால் சில நியமங்களை பின்பற்றியாக வேண்டும். என்றால், தேவாதி தேவனை நாடிச் செல்லும்போது அதை விட மேலானதும்,உயர்வானதுமான பலியுடன் செல்லவேண்டுமென உரோமை நகர் விசுவாசிகளுக்கு பவுல் அறிவுறுத்துகிறார்; “சகோதரர்களே, ஏதாவதுகொஞ்சம் செய்யுங்கள் என வேண்டுகிறேன். தேவன் நம்மிடம் மிகுந்த இரக்கத்தைக் காட்டியிருக்கிறார். உங்கள் சரீரங்களை தேவனுக்கு உயிர்ப் பலியாகத் தாருங்கள். இதுவே அவரை வழிபடுவதற்கான பக்தி வழியாகும். தேவன் இதில் திருப்தியடைகிறார்.” (ரோமர் 12:1) எந்த ஒரு பலியை ஏறெடுப்பதென்றாலும் அதில் ஒரு வேதனை, தியாகம் நிச்சயம் இருக்கும். எதையாவது, நமக்குப்  பிரியமானதை வழங்குவதன் பெயர் பலியல்ல, மாறாக அவருக்கு ஏற்புடையதைத் தரவேண்டும். ஆபிரகாமின் விசுவாசம் சோதிக்கப்பட்டது ஒரு பலியின் வேண்டுகோளை அவனுக்குச் சொன்னபோது; “தேவன் அவனிடம், ‘உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் மகனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்’ என்றார்.” (ஆதி 22:2) நிச்சயமாய் அது அவனுக்கு மிகவும் கடினமாகத் தோன்றியிருக்கும், என்றாலும் ஆபிரகாம் தேவனைத் திருப்திப்படுத்துவதையே தேர்ந்து கொண்டான். ஆகவே தான் தேவனும் மகனை அவனுக்கே மீண்டும் தந்து ஏற்புடையவனாக்கினார். நாமும் நம் உடலை உயிருள்ள பலியாக்கி அவருக்கு ஏற்புடையவர்களாவோம்.

 

அப்பா, எங்கள் உடலை பலியாக்கச் சொன்னதற்காக நன்றி கூறுகிறோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே அதை உகந்த காணிக்கையாக்க உதவி செய்வாராக, இயேசுவின் மிகவும் பிரியமான நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.