தேவன், “நான் உன்னோடு இருப்பேன்"...என்றார். யாத்திராகமம் 3:12

அவர் உடனிருப்பதாய் உறுதியளிக்கிறார்

நம்பிக்கையிழந்து, பயந்து, கைவிடப்பட்ட நிலையில் எகிப்தினிற்று வெகுதூரம் விலகி நின்ற மோசேயை அவர் அழைத்து, தன் விடுதலையின் திட்டத்தை அறிவித்த போது தேவன் கொடுத்த மிகப்பெரிய உத்தரவாதம், தான் உடன் வருவேன் என்ற ஒன்று தான்;  தேவன், “நான் உன்னோடு இருப்பேன். எனவே நீ இதைச் செய்ய முடியும். நான் உன்னை அனுப்புகிறேன் என்பதற்கு இதுவே சான்றாகும்! ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்திய பிறகு, நீ வந்து இம்மலையின் மேல் என்னைத் தொழுவாய்!” என்றார். யாத்திராகமம் 3:12 நம் சார்பில் அவர் ஒப்படைக்கும் திட்டங்களை மனிதன் என்ற நிலையில் எண்ணினால், இயலாததாகவும், கடினமானதாகவும் தோன்றும். ஆனால், சூழ்நிலையின் மொத்த காட்சியையும் வேறுபடுத்துவது ஒன்றே ஓன்று தான், அது அவரும் நம் உடன் நடப்பது.  இயேசுவும் கூடத் தன் பணிக்கென சிலரை அழைத்து, மீட்பின் இரகசியங்களை விவரித்து, அவரது நற்செய்தி தூதுவர்களாக அனுப்பின போதும், வாக்களித்ததும் இந்த ஒன்றே ஒன்றுதான், அது அவரின் உடனிருப்பு;  "நான் உங்களுக்குக் கூறிய அனைத்தையும் அவர்களும் பின்பற்றும்படி போதனை செய்யுங்கள். நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன் என்பதில் உறுதியாயிருங்கள். உலகின் முடிவுவரையிலும் நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன்” என்றார். மத்தேயு 28:20  விசுவாச வாழ்விலும், பணியிலும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியதும் ஒன்றே ஒன்று தான், அவரின் நிச்சயமான உடனிருப்பு. அதை விசுவாசித்து, அதிலே திருப்தியடைந்து அவருடன் நடை பயில அவரே நமக்கு உதவுவாராக.

 

அப்பா, எங்கள் வாழ்வுப் பயணத்தில் உடன் நடப்பதாக வாக்களிப்பதற்காக நன்றி கூறுகிறோம். உம் ஆவியார் தாமே உமது மகனின் உடனிருப்பபை உணர்ந்து நடக்க வலுவூட்டுவாராக, இயேசுவின் உண்மையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.