பாரங்களை உதறித் தள்ளுவோம்
ஓடுகளத்தில் விரைவாய் முன்னேறிச்செல்லும் எந்த விளையாட்டு வீரனும், இலகுவான, மற்றும் எளிதான ஆடையையே தேர்ந்து அணிகிறான், இல்லையென்றால் அது அவனின் முன்னேற்றத்தை, வெற்றியை மிகவும் பாதிக்கும். விசுவாச வாழ்வுப் பந்தயத்தில் களமிறங்கியுள்ள நாமும், நம்மை அழுத்துகிற அசவுகரியமான எல்லாவிதமான பாரங்களையும் தவிர்க்க வேண்டுமென எபிரேயர் நூலின் ஆசிரியர் எச்சரிக்கிறார்; “எனவே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக.” (எபிரேயர் 12:1) எந்தவொரு பாவமும், நம் ஆன்மாவை அழுத்தி, நம் ஓட்டத்தைத் தடைசெய்யும் பளுவாக அமைகிறது. தாவீதும் இதை உணர்ந்ததால் கூறுகிறான்; “என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன; தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன.” (சங் 38:4) வெற்றியின் இலக்கைக் கண்முன் கொண்டுள்ள நாம், நம் ஓட்டத்தைத் தடை செய்யும் எல்லாவிதமான பாவ, பலகீனங்களையும் தேவனின் உதவியோடு உதறித் தள்ளுவோம். வெற்றியடைவோம்.
அப்பா, எங்களை அழுத்துகின்ற பாவங்களை உதறித்தள்ள அறிவுறுத்துவதற்காக நன்றி கூறுகின்றோம். உம பரிசுத்த ஆவியார் தாமே அவைகளை உதறித்தள்ள துணிவையும், தெளிவையும் இன்றே தருவாராக. இயேசுவின் அற்புதமான நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.