தகுதிப்படுத்தி நடத்தும் ஆவியார்
பல நூறு ஆண்டுகளாக,தேவன் தம் மக்களை எழுதப்பட்ட சட்டங்களால் வழி நடத்திச்சென்றார். இயேசுவின் வருகையோ ஒரு புதுக் காலத்தைத் துவங்கியது. இந்தப் புதிய உடன்படிக்கையின் காலத்தில் நம்மை வழி நடத்தும் பணியை தேவனின் ஆவியார் ஏற்றுக்கொள்கிறார். ஆகவே தான், அவரை நம் நல்ல துணையாளராக இருக்கும்படி இயேசுவே வாக்களித்தார்;" அந்த உதவியாளர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார். உண்மையின் ஆவியே அந்த உதவியாளர். இந்த உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் உலகம் அவரைக் காணாமலும் தெரிந்துகொள்ளாமலும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அவரை அறிவீர்கள். அவர் உங்களோடு வாழ்கிறார். அவர் உங்களிலும் வாழ்வார்." யோவான் 14:16-17 பவுல், புதிய இந்த உடன்படிக்கையின் பணியாளர் என்ற நிலையில் பயிற்றுவிக்கப்பட்டு, நடத்திச்செல்லப்பட்டதைப் பெருமையோடு மற்றும் அனுபவித்து எழுதுகிறார்; "புது உடன்படிக்கை ஊழியராக இருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவர் ஆக்கினார். இந்தப் புதிய ஒப்பந்தம் வெறும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தமாய் இராமல் ஆவிக்குரியதாக இருக்கிறது. எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆவியோ வாழ்வைத் தருகிறது." 2 கொரி 3:6 நாமும் கூட தேவனின் இந்தப் புதிய நியமத்துக்கு நம்மை உட்படுத்தி, நிறைவான வாழ்வின் வழிநடத்தலில் நம்மை ஒப்படைப்போம்.
அப்பா, ஆவியாரால் நடத்தப்படும் இந்தப் புதிய நியமத்துக்காக உமக்கு நன்றி சொல்கின்றோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே எங்களைத் தகுதிப்படுத்தி, அவரின் குரலைக் கேட்டு வாழச் செய்வாராக, இயேசுவின் அற்புதமான நாமத்தில் செபிக்கிறோம் , ஆமென்.