விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக் கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். 1 திமொ 6:12

நிலைவாழ்வை இலக்காகக் கொள்

வானத்தின் மிக உயர்வான எல்லையில் தன் சிறகை விரித்துப் பறப்பது தான், பறவை என்ற நிலையில் கழுகின் உயர்வான இலக்காக இருக்க முடியும். அதேப் போல, கிறிஸ்தவன் என்ற நிலையில், நம்மை பற்றிக்கொள்ளும் உலக ஈர்ப்பை விடுவித்துக் கொண்டு, நிலையான வாழ்வை கைக்கொள்ள விரும்புவது தான் சரியான இலக்காக இருக்கும் எனலாம். தீவிரமான அதன் வேகம் தான் எந்த ஒரு விண்கலத்தையும், புவியின் ஈர்ப்பினின்று விடுவித்து வானிலேப் பறந்து நிலைகொள்ளச் செய்யும். அதுபோன்றே பேரார்வமும், ஆவிக்குரிய வாழ்வுக்கான தீவிரமானத் தினசரிப் பயிற்சியும் தான் நம்மை வெற்றிபெறத்  தகுதியுள்ளவர்களாகும் என பவுல் குறிப்பிடுகிறார்; பந்தயங்களில் பங்கு பெறுகிறவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொள்வர். ஒரு கிரீடத்தை வெல்வதற்காக இதைச் செய்வார்கள். கொஞ்ச காலத்தில் அழியக் கூடிய உலக ரீதியான கிரீடம் அது. ஆனால் நாம் பெறும் கிரீடமோ அழியாது நிலைநிற்கும். 1 கொரி 9:25 அப்படிச் செயல்படுகிற வேலையில் நிலைவாழ்வு என்ற பரிசு நமதாகுமென்று சொல்லி, நம்மைத் தூண்டுகிறார்; விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக் கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய். 1 திமொ 6:12 என்றுமே அழியாமல், எல்லாக் காலத்தும் நிலைத்து நிற்கும் பரிசின் மேல் நம் பார்வையை பதிப்போம், ஏனென்றால் விசுவாசப் போராட்டத்தின் வீரர்கள் நாம்.

 

அப்பா, நிலை வாழ்வில் பங்கேற்க எங்களை அழைப்பதற்காக நன்றி கூறுகின்றோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே,விசுவாசப் போர்வீரர்களாக எங்களை நாளும் பயிற்றுவிப்பாராக, இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.