உம்முடைய உண்மையின் மூலம் உமது சேவைக்கு அவர்களைத் தயார்படுத்தும். உமது போதனையே உண்மை. யோவான் 17:17

பணி செய்ய புனிதமாக்கு

தேசத்தின் பாதுகாப்பில் ஈடுபடும் ஒருவன், தன்னை சிறப்பான ஒழுக்கத்திற்கும், பயிற்சிக்கும் உட்படுத்தியாக வேண்டும். அது போன்றே இறைப் பணியில் தன்னை ஈடுபடுத்தும் எவரும், புனிதம் என்கிற நிலையில் தன்னைத் தகுதிப்படுத்தியாக வேண்டும். பொன் தீயிலிடப்பட்டு புடமிடப்படுவது போல, தேவ வார்த்தை என்ற உண்மை ஒருவனை இறை பணிக்குத் தகுதியுள்ள பாத்திரமாக உருவாக்குகிறது. அப்படிப்பட்ட தூய்மை தன் சீடர்களுக்கு வேண்டும் என்பதற்காக இயேசு மன்றாடினார்: உம்முடைய உண்மையின் மூலம் உமது சேவைக்கு அவர்களைத் தயார்படுத்தும். உமது போதனையே உண்மை. யோவான் 17:17 தினசரி வாசிப்பு, ஆழமான தியானம், மற்றும் கருத்தோடு இறை வார்த்தையைப் பிரயோகிப்பதே நம்மை அவர் சேவைக்குத் தகுதி உடையவர்களாக்கும். தாவீது கொண்டிருந்த உகந்த மனநிலை நமதாக வேண்டி செபிப்போம்: கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன். அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன். சங்கீதம் 119:111-112

 

அப்பா, எங்களைத் தூய்மைப்படுத்த நீர் செய்துள்ள ஏற்பாட்டுக்காக நன்றி கூறுகின்றோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே உமது வார்த்தை என்னும் உண்மையால் நாளும் எங்களைப் புனிதப்படுத்துவாராக, இயேசுவின் பரிசுத்த நாமத்தில் செபிக்கிறோம். ஆமென்.