காலையில் நமது கடமை
வாழ்வு என்ற கொடை, இன்னும் ஒரு புதிய நாள் எல்லாமே நம் வாழ்வின் அர்த்தத்தை நமக்குக் கற்றுத்தரவேண்டும். இந்த மறைபொருளின் இரகசியத்தின் உணர்வு நம்மைத் துதிக்கும், ஆராதனைக்கும் நிச்சயமாய் இட்டுச்செல்லும். அன்றாடம் நாம் அனுபவிக்கும் அளவற்ற தேவ இரக்கத்தினை ஒருபோதும் நிராகரிக்கவோ, புறக்கணிக்கவோ செய்யக்கூடாது. அனுபவத்தின் ஆனந்தத்தில் அகமகிழ்ந்து தாவீது சொல்லி உணர்த்துகிறான்: “நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!” (சங்கீதம் 100:4) நன்றி நம் புனிதத்தின் நல்ல வெளிப்பாடு, அதை காணிக்கையாக எடுத்துக்கொண்டு தேவ சமூகம் நாடிச் செல்வோம். ஏனென்றால் அவர் நாமம் அத்தனை மகிமைக்குரியது: “தேவனுக்குக் கிறிஸ்து பணிந்தார். ஆகையால் தேவன் அவரை மிக முக்கியமான இடத்துக்கு உயர்த்திவிட்டார். தேவன் அவரது பெயரை மற்ற எல்லா பெயர்களையும் விட உயர்வாக்கினார். அனைவரும் இயேசுவின் பெயருக்கு முன்பு தலைகுனிந்தே இருக்க வேண்டும் என்பதற்காகவே தேவன் இதனைச் செய்தார். பரலோகத்திலும், பூலோகத்திலும், பூமிக்குக் கீழுள்ள உலகத்திலும் உள்ளவர்கள் அவரைப் பணிவார்கள். ‘இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர்’ என்று அனைவரும் அறிக்கை செய்வர். அவர்கள் இதனைச் சொல்லும்போது பிதாவாகிய தேவனுக்கு மகிமை சேரும்.” (பிலிப்பியர் 2:9-11)
அப்பா, எண்ணி விவரிக்க இயலாத இந்தக் கடமையின் நினைவூட்டலுக்காக நன்றி சொல்கின்றோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே இந்தக் குருத்துவக் கடமையை எல்லா விசுவாசிகளுக்கும் உணர்த்தி துதிக்கச் செய்வாராக. இயேசுவின் அதி உன்னத நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.