பரலோகத்தின் நிச்சயமான வெகுமதி
பெரிய வேலை, பெரிய ஊதியம், பெரிய வாகனம், பெரிய வீடு, பெரிய அதிகாரம்- இவை தான் சாதாரணமாகவே அநேகம் பேரின் ஆசை, ஆகவே தான் சிறிய பணியையும், சிறிய பணியாளனையும் அற்பமாக எண்ணி, துச்சமென்கின்றனர். சிறு செயல் அது தான் மிகப்பெரிய பலனைத் தரும் என்பதை விவசாயி அறிந்துள்ளான், தாவீதும் ஆமோதிப்பது போலவே: "கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள்." (சங்கீதம் 126:5-6) தலைமைப் போதகராம் இயேசுவும் விதைப்பவன் உவமையில் நூறு மடங்கும் பலன் தரும் வார்த்தையை நம்பிக்கையோடு விதைக்கச் சொன்னார். தலைவன் தந்து சென்ற சிறிய தாலந்தைப் புதைத்தவன் ஆச்சரியப்பட்டான், நம்பி ஒப்படைத்தவன் பணி சிறியதோ, பெரியதோ என்றல்லாமல் தொடந்து செய்தவனுக்கு வெகுமதியாகத் தலைவனாக்கி உயர்த்தி உத்தரவிட்டான்: "அரசன் அந்த வேலைக்காரனை நோக்கி, ‘நல்லது, நீ ஒரு நல்ல வேலைக்காரன். சிறிய காரியங்களில் உன்னை நம்பக் கூடும் என்று காண்கிறேன். ஆகவே இப்போது எனது பட்டணங்களில் பத்து பட்டணங்களை ஆளும்படியாக உன்னை நியமிப்பேன்’ என்றான்." (லூக்கா 19:17) நம்மை நம்பி தேவன் ஒப்படைத்த, எந்த ஒரு சிறு பணியையும் முணுமுணுக்காமல், புறந்தள்ளாமல் ஆர்வமாய் செய்வோமாக.
அப்பா, உம் வார்த்தையை விதைக்கும் சிறிய பொறுப்பில் எங்களையும் நியமித்தமைக்காக நன்றி. உம் ஆவியார் தாமே இதை ஆர்வமாய் செய்து, உம் அரசின் நகரங்களை நிர்வகிக்கவும் கற்றுத் தந்து நடத்துவாராக, இயேசுவின் அதி வல்லமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.