கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர். என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. சங்கீதம் 23:5

மிகவும் உயர்ந்த ஏற்பாடுகள்

உலகப் பிரசித்தி பெற்ற கடல் உலாவுக் கப்பல்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு, தங்களின் பலதேச உயர் தர ஏற்பாடுகளை விளம்பரம் செய்து தகுதியுள்ள பயணிகளை வாடிக்கையாளர்களாக ஈர்க்கிறது. தேவன் தான் தேர்ந்தெடுத்தோர்க்கு ஏற்பாடு செய்துள்ள உணவு, மற்றும் சிறப்பு எல்லாம் மனித புரிதலுக்கே அப்பாற்பட்டது. அவரால் மாத்திரமே அத்தனை உயர்ந்த ஏற்பாட்டைத் தர இயலும், ஏனெனில் உணவு, உயிர் மற்றும் உலகெல்லாம் அவரது உன்னதப் படைப்பே. அவர் தரும் உணவே எல்லாவற்றினும்  சுவையானது, புத்துணர்வூட்டுவது, தெம்பளிப்பது. இத்தனை ஏற்பாட்டைக் கண்ட தாவீது ஆச்சர்யத்திலாழ்ந்து பாடலொன்றை தவழ விடுகிறான்: "கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர். என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது." (சங்கீதம் 23:5) எத்தனை கோடி செல்வமிருந்தாலும் வாங்க இயலாத எண்ணெய் அபிசேகம் என்ற ஆவியார் அவர் வழங்கும் அடுத்த ஏற்பாடு. நாம் தகுதியே இல்லையென்று எண்ணும், தானும் அதை அறிந்து ஏற்றுக்கொள்ளும் அந்த மனிதன் மேல் அவர் அதைப் பொழிகிறார். தொடர்வதோ, அவன் பாத்திரம் நிரம்புகிறது, எதுவரையென்றால் நிரம்பி வழியும் வரை, நிறைந்த பின் வழிவதோ மற்றவர் பயன் பெற. இதை பெற்றதால் பெருமை கொள்ளலாகாது, ஏனென்றால் வாங்க இயலாத இவ்வருட்பொழிவு, தேவ இரக்கத்தின் மிக மேலான வெளிப்பாடு.

 

அப்பா, தகுதியற்ற உம் ஊழியன் மேல் நீர் வைத்துள்ள இம்மேலான அன்பு, மற்றும் ஏற்பாட்டுக்காக நன்றி. உம் ஆவியார் தாமே இதைப் பெற, இதிலே அகமகிழ, நிலைத்திருக்கச் செய்வாராக, ஆமென்.