அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். திருப்பா 95:8

முழுமையான கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்

எத்தனை திறமை படைத்தவனாக இருந்தாலும், விமான ஓட்டி கட்டுப்பாடு அறையிலிருந்து வரும் குரலைக் கேட்டு நடந்தால் தாம் பாதுகாப்பாய் மேலேறிப்பறக்கவும், தரை இறங்கவும் இயலும். ஆவிக்குரிய வாழ்விலும் மிக மிக அவசியமான பாடம் என்னவென்றால், நம் நன்மைக்காக தேவன் கூறும் வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டு, முழுமையாகப் பின்பற்றுவது தான். இறை நூலில் எழுதப்பட்டுள்ள எல்லாமே, தரப்பட்டுள்ளது, பிறர் செய்த அந்தத் தவறுகளை, நாமும் செய்யாது, ஆசீர் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே. கீழ்ப்படியாமை, அகங்காரம், அடம் பிடித்தல் எதுவுமே தேவனுக்குப் பிரியமில்லாதவை. ஆதாம், ஏவா, லோத்துவின் மனைவி என இவர்கள் எல்லாருமே கீழ்ப்படியாததால் இழந்தது எவ்வளவோ எவ்வளவு. நம்மை மிகவும் ஆசீர்வதிக்க விரும்பும் தேவன் இன்றும் சொல்வதோ: “அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.” (திருப்பா 95:8) நம் திறமை, நம்  வேலைப் பொறுப்பு, நாம் சேர்த்து வைத்துள்ள சொத்து, நமக்கிருக்கும் செல்வாக்கு, நம்மோடு சேர்ந்துள்ள புதிய பங்காளர்கள் என, பலவும் நம் தேவனுக்குக் கீழ்ப்படியத் தடையாய் அமையலாம். எச்சரிக்கையோடிருந்து, அவரின் குரலைக் கேட்டு, அவர் நமக்குத் தர விரும்பும் ஆசீர்வாதத்தை இழந்து விடாதிருப்போம்.

 

அப்பா, எங்களை அறிவுறுத்தி திருத்தும் உம் வார்த்தை, மற்றும் குரலுக்கு நன்றி. உம் ஆவியார் தாமே எங்கள் தவறுகளைத் தாழ்ச்சியோடு ஏற்கவும், உம் ஊழியர்கள் மூலம் கடந்து வரும் எச்சரிக்கையைப் புரிந்து வாழவும் கற்றுத் தருவாராக, இயேசுவின் அதிகாரமுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.