எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! எசாயா 60:1

விழித்தெழத் தரப்படும் அழைப்பு

ஒரு காலத்தில், உயர் வகுப்பினர் மட்டுமே அனுபவித்து வந்த ஏற்பாடு, இன்று எல்லாருக்குமே எளிதாய் வாய்க்கப் பெற்றுள்ளது. நாம் துகிலெழ வேண்டிய நேரத்தை, முன்கூட்டியே தீர்மானித்து, நம்மை விழித்து எழுப்பச் செய்யும் ஏற்பாடே விழித்தெழ அழைப்பு எனலாம். வேறொரு அர்த்தம் என்னவென்றால், அசௌகரியமான சூழலில் நாம் உள்ள போது, நம்மை எச்சரித்து உதவச் செய்யும் மற்றுமொரு ஏற்பாடு. மனிதன் என்பதால், களைப்படைவதும், சோர்ந்து உறங்குவதும் கூட ஆவிக்குரிய வாழ்வில் நிகழலாம், என்பதால் காலத்தையும், இடத்தையும் உணர இயலாத நம்மையும், அவரே பொறுப்பெடுத்து விழித்தெழ அழைக்கிறார். நம்மை உண்டாக்கியவரும், உரு தந்தவருமான கடவுள், தான் தேர்ந்து கொண்டவர் தேசங்கள் முன் ஒளிர்ந்து சுடர் விட, தன் மகிமையின் பேரொளியால் நம்மை ஒளிர்வித்து மகிழ்கிறார்: “எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!” (எசாயா 60:1) மோசே கடவுளின் மகிமையைக் காண விரும்பிய போது, அவர் அவனால் தாங்க இயலா, தான் மாட்சியின் ஒளியை அவனால் தாங்குமளவே, வெளிப்படுத்தினார். எலிசாவும், தன்னை அழைத்த எலியாவின் வல்லமையையும், போர்வையையும் விரும்பி வேண்டிய போது, நிபந்தனையோடு ஏற்று, அதை அவன் நிறைவேற்றிய வேளையில், பகிந்தளித்தார், அவனும் அதைப் பெற்று நீரைப் பிளந்து அற்புதத்தை அனுபவித்தான். நாமும், கடவுள் விழித்தெழ அழைக்கையில், அஞ்சி, நடுங்கி, ஆராதனையுடனே எழும்புவோம், அவரின் மகிமையை அணிந்து மகிழ்வோம்.

 

அப்பா, உமது மகிமையை எங்கள் மேல் ஒளிரச்செய்ய எங்களை விழித்தெழ அழைப்பதற்கு நன்றி. உம் ஆவியார் தாமே தகுதியற்ற எங்களை தாழ்ச்சியுடனே வழிநடத்தி, நல் அச்ச, நடுக்கத்துடனே ஆராதித்து, உமது தேர்ந்தெடுக்கப்பட்டவர்க்கான மகிமையை பெற்றுக்கொள்ள உதவுவாராக, இயேசுவின் வல்லமை நிறை நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.